மக்களவை தேர்தலின் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
17-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவுகளில் சராசரியாக 67% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனிடையே பீகார், அரியானா, ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். 1984 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சீக்கிய படுகொலை குறித்து காங்கிரசை சேர்ந்த சாம் பிட்ரோடா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் காங்கிரசுக்கு எதிராக அதை வைத்து பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்தனர். பிரசாரம் நிறைவுபெற்ற 59 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.