ஒரு கிரிக்கெட் போட்டியில் சிக்ஸர் எல்லாம் எப்போதாவதுதான் பறக்கும். ஆனால் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து- மேற்கிந்திய தீவுகள் இடையேயான ஒருநாள் போட்டியில் அடைமழையாக சிக்ஸர் மழை பொழிந்தது. மேற்கிந்திய தீவுகளின் செயின்ட் ஜார்ஜியாவில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் தான் இந்த மிரட்டல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்களை குவித்தது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் மட்டும் 77 பந்துகளில் 150 ரன்களை விளாசி தள்ளினார்.இதில் 13 பவுண்டரிகளும், 12 சிக்ஸர்களும் அடங்கும். அவரைத் தவிர, கேப்டன் மோர்கன் 103 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 82 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில், தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் விதமாக தொடக்க வீரர் கிறிஸ் கெயில் 97 பந்துகளில் 162 ரன்களை விளாசினார். இதில் 11 பவுண்டரிகளும், 14 சிக்ஸர்களும் அடங்கும். டேரன் பிராவோ 61 ரன்களும், பிரத்வெயிட் 50 ரன்களும் எடுத்தனர். ஆனால் மற்ற வீரர்களின் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் மேற்கிந்திய தீவுகள் அணி 48 ஓவர்களில் 389 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் மொத்தமாக 46 சிக்ஸர்கள் பறந்தது . மொத்தமாக இரு அணிகளும் 807 ரன்கள் எடுத்தன . சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவே ஆகும்.
2015 உலகக் கோப்பைக்குப் பிறகு, அதாவது கடந்த 4 வருடங்களில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களுக்கும் மேல் அடித்தது இது ஐந்தாவது முறையாகும். கிறிஸ் கெயில் 51 பந்துகளில் சதம் அடித்து, தனது அதிவேக ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். தவிர, ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களையும் கடந்தார்.