ஆறு வயது சிறுமியை கைது செய்த அமெரிக்க காவல்துறை

பள்ளிக் கூடத்தில் அடம் பிடித்த 6 வயது சிறுமியை அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்த விவகாரம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுமிக்கு நடந்தது என்ன?

அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான புளோரிடாவில், குற்றம் இழைப்பவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க சட்டத்தில் வழி உள்ளது. இதனால் பள்ளி மானவர்கள் கூட சில சமயம் கைதுக்கு ஆளாவது உண்டு. ஆனால் இப்படியாகக் கைது செய்யப்படுபவர்கள் ஆலோசனை முகாம்களுக்கு அனுப்பப்படுவார்கள், இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்காது.

பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு காவல் அதிகாரியை நியமிக்கும் வழக்கமும் அமெரிக்காவில் உண்டு, இந்தக் காவலர்கள் ’ஸ்கூல் ரிசோர்ச் ஆஃபிசர்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

ஃபுளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் முதல் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியான கயா ரோல் ஆசிரியரிடம் அடம் பிடிக்கும் போது, சிறுமியின் கால் ஆசிரியர் மீது பட்டு உள்ளது.

அந்தப் பள்ளியின் காவல் அதிகாரியாக பணியாற்றி வரும் டென்னிஸ் டர்னர் என்பவர், கயாவை கைது செய்த அவர், சிறுமியின் கைகளை பிளாஸ்டிக் டேப்பினால் ஒட்டி, கைவிலங்கு போட்டுள்ளார். சிறார் காவல் நிலையத்தில் ‘பிறரைத் தாக்குதல்’ என்ற பிரிவின் கீழ் சிறுமி கயா மீது வழக்குப் பதிவு செய்ததுடன், சிறுமியின் கையில் பெயர்ப் பலகையைக் கொடுத்து, புகைப்படமும் எடுத்துள்ளார். இதன் பின்னர் கயா வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த கயாவின் பாட்டி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் மூலமாகவே இந்த செய்தி உலகத்திற்குத் தெரிய வந்ததுள்ளது. ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘ஸ்லீப் அப்னீயா – எனப்படும் தூக்கக் குறைபாடு என்ற நோய் சிறுமிக்கு உள்ளதாக கூறினார். அதற்காக உட்கொள்ளும் மருந்துகளால் அவள் இயல்பை மீறி அடம்பிடிப்பது உண்டு என கூறிய அவர், அடம் பிடித்ததற்காக சிறுமி கைது செய்யப்பட்டிருப்பது தனக்கு அதிச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர், இதைப் புரிந்து கொள்ளும் வயது கூட அவளுக்கு இல்லை’ – என்றும் குறிப்பிட்டார்.

இந்த சர்ச்சையை தொடர்ந்து, காவல் அதிகாரி டென்னிஸ் டர்னர் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். சிறுமியின் குடும்பத்தினரிடம் புளோரிடா காவல்துறை மன்னிப்பும் கேட்டு உள்ளது. இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில், புளோரிடா மாகாண மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version