தாய்லாந்தில் அருவியில் மூழ்கிய குட்டியை காப்பாற்றச் சென்ற ஆறு யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் பாங்காக் அருகே ஹவோ யாய் தேசிய வனவிலங்கு பூங்காவிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்த பூங்காவில் உள்ள மலைப் பகுதியில் ஹயேவ் நரோக் என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நிலையில், இந்த நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியில் யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டதால், பூங்கா ஊழியர்கள் அங்கு சென்றபோது நீர்வீழ்ச்சிக்குள் குட்டி யானை மூழ்கி கிடப்பதையும் அதை காப்பாற்றுவதற்காக, இரண்டு யானைகள் முயற்சிப்பதையும் பார்த்தனர். உடனடியாக அந்த இரண்டு யானைகளையும் மீட்டு பாதுகாப்பாக கீழே அழைத்துச் சென்றனர். பின் நீர்வீழ்ச்சிக்கு அருகே சென்று பார்த்தபோது சற்று தள்ளி ஆறு யானைகள் தண்ணீருக்குள் மூழ்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. ‘குட்டி யானையை காப்பாற்றுவதற்காக சென்று அந்த ஆறு யானைகளும் இறந்திருக்கலாம்’ என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.