உட்கட்சி பூசலால் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஊழல் கரை படிந்த கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வேட்பாளரை அறிவித்த பின்னரே நீண்ட தாமதமாக காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அப்படி இருந்தும் சிவகங்கை தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு உட்கட்சி பூசல் தலைவிரித்தாடியது. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த, தனது மகனுக்கு சீட் கேட்டு ப.சிதம்பரம் ஒருபக்கமும், கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தனக்கு சீட் கேட்டு, மற்றொரு பக்கமும் மேலிடத்திற்கு நெருக்கடி அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்கள் வலுவாக இருந்ததால், அவருக்கு காங்கிரஸ் தலைமை சீட் கொடுக்க மறுத்ததாக கூறப்பட்ட நிலையில், ப.சிதம்பரம் தரப்பு காரியத்தை கமுக்கமாக முடித்துள்ளது.காங்கிரசில் தொண்டர்களே இல்லாவிட்டாலும், அக்கட்சிக்காக உழைத்த மேல் மட்டத் தலைவர்கள் சிலர், சிவகங்கை தொகுதியை குறி வைத்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இதே சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம், 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். வாரிசு அரசியலுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்ததோடு, தனித்து போட்டியிட்ட அதிமுக 4 லட்சத்து 75 ஆயிரம் வாக்குகள் பெற்று சிவகங்கை தொகுதியை கைப்பற்றியது. தற்போது, அதிமுகவோடு, பாமக, தேமுதிக, பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் கூட்டணி வைத்துள்ள நிலையில், இந்த தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தின் தோல்வி இப்போதே உறுதி செய்யப்பட்டுள்ளது.