அயோத்தியில் நடைபெறும் பிரமாண்ட பேரணியில் பங்கேற்பதற்காக, அங்கு சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே வந்துள்ளதால், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே வலியுறுத்தி வருகிறார்.
வரும் 25ஆம் தேதி அயோத்தியில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதனையொட்டி சிவசேனா மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் நாளை அயோத்தியில் பிரமாண்ட பேரணி நடத்த உள்ளனர். இதற்காக இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் அயோத்தி வந்துள்ளனர்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பதற்றமான இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தவ் தாக்ரே அயோத்தி வந்து, அங்குள்ள மடாதிபதிகளிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அவர் அயோத்தி வந்ததையடுத்து, உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.