திண்டுக்கல் சிறுமலையில் கடமான் குளத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருப்பதால், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவர முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பெய்த கனமழையால், சிறுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாங்குளம் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
இதனால் அப்பகுதி விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேடான சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் சரக்கு வாகனங்கள் வழுக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் ஆங்காங்கே கயிறு கட்டி இழுத்து செல்லும் அவலநிலையும் ஏற்படுவதால் விவசாயிகள் கடும் வேதனையடைந்துள்ளனர்.
மலை சாலையில், சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்வதற்கு 3 மணி நேரமாவதாகக் கூறும் விவசாயிகள், இதனால் உரிய நேரத்தில் சந்தைகளுக்கு விளை பொருட்களை கொண்டு செல்ல முடிவதில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் உரிய வருமானம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் தட்டுத்தடுமாறி செல்லும் சூழ்நிலையில், அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் கூட விரைந்து செல்ல முடியாத நிலையே இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறினர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி உள்ளதால் சேதமடைந்த சாலையை சீரமைத்து தரமான சாலை அமைத்து தர வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.