பொள்ளாச்சி தந்த பூந்தமிழ்த் தென்றல்… கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள்!

மொழிபெயர்ப்பு, படைப்பு இலக்கியம் என இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய தகவல் முத்துகளுடன் வாழ்த்துகிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி…

 

பல்கலைக்கழக பாடங்களுக்கும் – படைப்பு உலகத்துக்கும் பாலமாகத் திகழ்ந்தவர் சிற்பி பாலசுப்ரமணியம்.

பொள்ளாச்சி தந்த பூந்தமிழ்த் தென்றல் இவர். கி.ஆ.பே, தெ.பொ.மீ, ம.பொ.சி உள்ளிட்ட சொல் பீரங்கிகள் உருவாக்கிய சுடர் இவர்.

பாரதி, பாரதிதாசன் கவிதைப் பரம்பரையில், நறுந்தமிழ்க் கவிதைகளின் நட்சத்திரமாய் ஜொலிப்பவர் – சிற்பி பாலசுப்ரமணியம். வானம்பாடி இயக்கத்தின் உந்துவிசை இவர்.

தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவருக்கு, ஆங்கிலம், மலையாளம், ரஷ்ய மொழிகள் – உள்ளங்கை நெல்லிக்கனிகள். பல்கலைக்கழகங்களில் பணியாற்றிக் கொண்டே படைப்புகளைச் செய்தவர்.

இவரது முதல் கவிதைத்தொகுப்பான “நிலவுப்பூ”, நிலமுள்ள வரையில் புகழ்பெறும் படைப்பு.

விரிவுரையாளர், துறைத்தலைவர், இதழ்களின் ஆசிரியர், கவிஞர், சொற்பொழிவாளர் என பல பொறுப்புகளுக்குச் சொந்தக்காரர் சிற்பி.

மொழிபெயர்ப்புக்கு ஒருமுறையும், தனது படைப்புக்கு ஒருமுறையும் என 2 சாகித்ய அகாடமி உயர் விருதுகளைப் பெற்றவர் சிற்பி பாலசுப்ரமணியம்.

இவர் படைத்த ‘சிரித்த முத்துக்கள்’, ‘சர்ப்ப யாகம்’, ‘சூரிய நிழல்’, ‘இறகு’, ‘மவுன மயக்கங்கள்’, ‘ஒரு கிராமத்து நதி’ உள்ளிட்ட கவிதை நூல்கள்,

‘சிற்பி தரும் ஆத்திச்சூடி’, ‘வண்ணப்பூக்கள்’ உள்ளிட்ட சிறுவர் நூல்களும், ‘மலையாளக் கவிதை’, ‘மின்னல் கீற்று’, ‘மகாகவி’ உள்ளிட்ட உரைநடை நூல்கள் குறிப்பிடத்தக்க குமுதங்கள்.

‘ராமானுஜர் வரலாறு’, ‘நம்மாழ்வார்’, ‘சே.ப. நரசிம்மலு நாயுடு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள்,

‘சச்சிதானந்தன் கவிதைகள்’, ‘உஜ்ஜயினி’, ‘கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள்,

‘அக்கினி சாட்சி’, ‘வாரணாசி’ உள்ளிட்ட புதினங்களும் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த வார்ப்புகள்.

ஆங்கிலம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில், இவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றத் தலைவராகவும் செயலாற்றிய சிற்பி பாலசுப்ரமணியம், தனது 85 ஆவது வயதை நிறைவு செய்கிறார்.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி

Exit mobile version