இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக தேசிய உளவுத்துறை தலைவரை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது ஓட்டல்கள் மற்றும் தேவாலயங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில், குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பாகவே ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக எச்சரித்ததாகவும், இதுகுறித்து அதிபர் சிறிசேனாவிடம் தெரிவித்ததாகவும் இலங்கையின் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் கூறியிருந்தார். இதனை அதிபர் சிறிசேனா தொடர்ந்து மறுத்துவந்தார். தாக்குதல் நடைபெறுவதற்கு 13 நாட்கள் முன்னதாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்தநிலையில் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு இன்று செல்ல இருக்கும்நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.