இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க விரும்பவில்லை என அந்நாட்டு அதிபர் சிறிசேன எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துவிட்டு அதிபர் சிறிசேன, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். ஆனால் நாடாளுமன்றத்தில் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் விக்ரமசிங்கேவே பிரதமராக நியமிக்கப்பட்டார். அங்கு புதிதாக தேர்தல் நடத்த சிறிசேன பிறப்பித்த உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் தேசிய அரசாங்கம் அமைக்க அனுமதிக்க ரணில் விக்ரமசிங்கே சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த முயற்சிக்கு சிறிசேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசிய அரசு அமைப்பது என்பது அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச சக்திகள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், இலங்கை சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் ஆகியும் தமிழர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.