மனநிலை மாற்றும் மந்திரக்குரல் : இசையரசி ஸ்வர்ணலதா

போவோமாஆஆஆஆஆஅ…… ஊர்கோலம்ம்ம்ம்…..

பூலோகம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்  எங்கெங் கும்……..

 

80களில் இசையுலகம் அதிகம் விரும்பிய பாடல்.  சொக்கவைக்கும் வைக்கும் குரல்வளத்தால் நம் சோகம் போக்கும் பாட்டுக்காரி ஸ்வர்ணலதாவின் குரலில்… ஆம். எந்தப்பயணத்தையும் இந்தப்பாடகியின் பாடல் இல்லாமல் இதுவரைநான் நிறைவு செய்வதில்லை.

கேரளத்துக் கிளியானாலும் தன் தாய்மொழியை விட தமிழ்மொழியில் அதிக ரசிகர்களைக் கொண்ட பாடகி ஸ்வர்ணலதா வின் பிறந்தநாள் இன்று…

”போறாளே பொண்ணுத்தாயி” என கண்ணீர் கசியவிடும் பாடலை இப்போது கேட்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அடுத்த பாடல் ஆட்டமா தேரோட்டமா வாக இருந்தால், ரம்யாகிருஷ்ணனையும் தாண்டி இந்தப் பாடலில் ஸ்வர்ணலாதாவைத்தான் கவனிக்க முடிகிறது. இப்போது இன்னொன்றைக் கவனித்தால், கண்ணீர் விட்ட உங்கள் கண்கள் மாறி கைகள் தாளமிட்டுக் கொண்டிருக்கும்..

இருக்கும் மனநிலையை மாற்றி பாடலின் மனநிலைக்கு நம்மை மாற்றிவிடும் மந்திர வித்தை ஒன்று இவர் குரலில் எப்போதும் இருக்கும். சொர்ணலதாவின் எந்தப்பாடலாகினும் சரி. இந்த ஒற்றுமையை பார்க்க முடியும்..

கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டிக்கும் கல்யாணிக்கும் 29 ஏப்ரல் 1973 ல் பிறந்த இவரது வாழ்வில் 3 வயதுகள் குறிப்பிடத்தக்கவை.

14 வது வயது :

ஆர்மோனியக்கலைஞரின் மகள் என்றாலும் அப்பாவின் பெயரால் துறைக்குள் வராமல் தனித்த திறமையால் வாய்ப்பை பெற்று முதன்முதலில் நீதிக்குத்தண்டனை படத்தில் பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ என்னும் பாடலை யேசுதாசுடன் பாடினார். அப்போது வயது 14.

19 வது வயது:

சிறந்த பின்னணி பாடகி விருதை இவர் பெற்றபோது வயது வெறும் 19.

21 வது வயது :

1994 – இந்தியாவின் சிறந்த பின்னணிப்பாடகிக்கான வெள்ளித்தாமரை விருதை கருத்தம்மா திரைப்படத்தில் இவர் பாடிய “போறாளே பொன்னுத்தாயி” பாடலுக்காக தேசிய விருது பெற்றபோது வயது 21.

இதே 1994 ம் ஆண்டில்தான் கலைமாமணி விருதும் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக ஒரு வயதைக் குறிப்பிட வேண்டுமென்றால் அவரது 37 வது வயதைக் குறிப்பிட வேண்டும்.

தொடர்ந்து இந்த ஞானக்குழந்தையின் கானக்கடலில் கரைந்து போயிருந்த தமிழ்சமூகத்திற்கு 2010, செப்டம்பர் 12 அன்று வந்துவிழுந்தது அந்த பேரிடி. ஆம். சொர்ணலதா இறந்தார் என்ற செய்திகேட்டு ஏன் இவ்வளவு அவசரம் என்று ரசிகர்கள் ரத்தக்கண்ணீர் வடித்த தினம் அது. தன் 37ஆவது வயதில் இசைப்பயணத்தை முடித்து இறைநிலை அடைந்தார் சொர்ணலதா. 

எண்ணிக்கையாகப் பார்த்தால், குறைந்தளவே  பாடல்கள் பாடியிருக்கிறார் என்ற போதும் எண்ணத்தில் ஊறும் இன்குரலால் நம் நெஞ்சங்கள்தோறும் நிறைந்திருக்கிறார் சொர்ணலதா…

பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்வர்ணலதா

Exit mobile version