நடிகர் சிம்பு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து வெளியான அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் நடிப்பதற்கு சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக தெரிகிறது. அந்த திரைப்படம் தோல்வியடைந்ததால் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் மட்டுமே சிம்புக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். ஆனால் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்பட்டதாகவும், மைக்கல் ராயப்பன் தன் மீது அவதூறு செய்தி பரப்பியதாகவும் கூறி 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 18 ஆம் தேதிக்குள் நடிகர் விஷால் மற்றும் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.