தமிழக அரசின் மானியத்தில் அதிக லாபம் தரக்கூடிய பட்டுப்பூச்சி பற்றிய விழிப்புணர்வு முகாம் விருத்தாசலத்தில் நடைபெற்றது.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் நாம் அணியும் பட்டாடைக்கு, பின்னால், பட்டு பூச்சியின் உழைப்பு உள்ளது. பட்டுப்பூச்சி வளர்ப்பினை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு மானியம் வழங்குவதோடு மட்டுமல்லாமல் பட்டுப்பூச்சி வளர்ப்பிற்காக விழிப்புணர்வு முகாமும் நடத்தி வருகிறது.
பட்டுபூச்சி வளர்ப்பிற்கு தேவையான மல்வேரியா செடிகளை நடுவதற்கு அரசு மானியம் மூலம் 10 ஆயிரத்து 500 ரூபாய் வழங்குகிறது. தண்ணீர் தேவையை கட்டுப்படுத்தும் விதமாக, சொட்டு நீர் பாசன வசதியை ஊக்குவிக்கிறது. இதற்காக, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் , இதர விவசாயிகளுக்கு 75%மானியமும், தமிழக அரசின் பட்டுபூச்சி வளர்ப்பு துறை சார்பில் அமைத்து தரப்படுகிறது.
கடலூர் மாவட்டம், முழுவதும் நிலத்தடிநீ ர்மட்டம் உயர்ந்து காணப்படுவதால் நெல்,கரும்பு முதலிய பணப் பயிர்கள் தொடங்கி பூ வகைகள் வரையிலாக, அனைத்தும் முப்போகம் விளையக்கூடிய பூமியாக உள்ளது. இந்நிலையில், அதிகம் லாபம் தரக்கூடிய இந்த பட்டுப் பூச்சி வளர்ப்பிலும் இப்பகுதி விவசாயிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஒரு பட்டுப்புழு மனை அமைப்பதற்கு, சதுர அடிகளைப் பொறுத்து 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தமிழக அரசு மானியம் வழங்குகிறது. மேலும் எந்திரங்கள், தெளிப்பான்கள் உள்ளிட்ட 8 வகையான கருவிகளுக்கு 52 ஆயிரம் ரூபாய் வரையும் மானியம் வழங்கி வருகிறது. இப்படி லாபம் தரும் இந்த பட்டுப்பூச்சி வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு மேலும் ஏற்படவேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.