சில்க் ஸ்மிதா…தமிழ் சினிமா இன்றளவும் கொண்டாடும் பெயர். விஜயலட்சுமியாக தனது வாழ்க்கையை தொடங்கிய அவரை தமிழ் சமூகம் சில்க் ஸ்மிதா- வாக அடையாளப்படுத்தியது.
மேக்கப் உமனாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர் வண்டிச்சக்கரம் படத்தில் “சில்க்” பெயரில் நடித்தார். அதுவே அவர் அடையாளமாகி போனது.
17 வருட சினிமா வாழ்க்கையில் அவர் பெறாத புகழ் இல்லை. தமிழ், கன்னடம், மலையாளம்,இந்தி நடிக்காத மொழிகள் இல்லை. கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்ட அவருக்குள்ளும் திறமைகள் பல உண்டு. இப்போதும் அவரின் படங்களை பார்க்கும் போது நடிப்பு திறமை தெரியும். ரஜினி, கமல் போன்ற நடிகர்களும் அவரின் கால்ஷீட்டுக்காக காந்திருந்தனர். எல்லா ஹீரோக்களின் படங்களிலும் பாகுபாடு இல்லாமல் நடித்தார். அவருக்கு ஆண் ரசிகர்களுக்கு இணையான பெண் ரசிகைகளும் உண்டு. ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘கோழி கூவுது’, ‘ரகசிய போலீஸ் 100’ போன்ற படங்களை பார்த்தால் சில்க் நடிப்பு எப்படிப்பட்டது என்பது தெரியும்.
அவரது கண்களும், ஸ்டைலையும் பார்த்தால் அதில் அப்படி ஒரு ஈர்ப்பு. அந்த காலத்தில் அவரைப்போல் நடனமாடிய நடிகைகள் யாரும் இல்லை. ஆனால் கடைசி வரை திரையுலகம் அவரை கவர்ச்சி நடிகையாகவே பார்த்தது. சினிமாவிற்கு வரவில்லையென்றால் நக்சலைட்டாக சென்றிருப்பேன் என்றார் சில்க் ஸ்மிதா. அது விரக்தியின் உச்சத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள் என்றே சொல்லலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பல ஏமாற்றங்கள் காரணமாக அவர் 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
மர்மங்கள் நிறைந்த அவர்களது வாழ்க்கையை “தி டர்ட்டி பிக்சர்” என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தாலும் அதில் சொல்லாத பக்கங்கள் பல உண்டு. ஒரு காலத்தில் ஊரே கொண்டாடிய அவரது உடலை, கடைசியில் வாங்கக்கூட ஆள் இல்லை என்பது தான் காலத்தின் சோகம். இன்றைக்கும் ஒருவரை குறிப்பிடும் போது நம்மை அறியாமல் வெளிப்படும் “நீ..பெரிய சில்க் ஸ்மிதா” என்ற வார்த்தையில் வெளிப்படுகிறது அவரது வாழ்க்கையின் வெற்றி….!