ஜெயங்கொண்டம் அருகே உள்ள சித்தமல்லி நீர்த்தேக்க அணையானது, 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதால், மகிழ்ச்சி அடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், குடிமராமத்து பணிகள் மூலம் வடிகால் ஓடையை சரிசெய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் சித்தமல்லி நீர் தேக்க அணை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த அணையானது, முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட அணையாகும். சிறப்பு வாய்ந்த இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த அணை, கடந்த 2011ம் ஆண்டு அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதன்பிறகு தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால், சித்தமல்லி நீர் தேக்க அணை தனது முழு கொள்ளளவை எட்டி, நீர் நிரம்பி வழிகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தொலை நோக்கு பார்வையால் உதயமான குடிமராமத்து திட்டம், தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு, அதன் மூலம் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில், இந்த சித்தமல்லி நீர் தேக்க அணைப் பகுதியில், தமிழக அரசின் சார்பில், அண்மையில், 28 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 கிலோமீட்டர் வரை தூர்வாரப்பட்டது. இதன் வழியாக அணையின் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றுக்கு திறந்து விடப்படுகிறது.
இந்த பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் சித்தமல்லி நீர் தேக்க அணை மூலம் ஆயிரக்கணக்கிலான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், இத்தனை வருடங்கள் கழித்து இந்த அணை நிரம்பி இருப்பதால், விவசாயிகள் மட்டுமல்லாமல், அப்பகுதி பொது மக்கள் அனைவருமே பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், குடிமாரமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்ட ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருவதால், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. விவசாயத்திற்கான தண்ணீர் தேவை, குடிநீர் தேவை என அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் குடிமராமத்து திட்டமானது, நமக்கு மட்டும் பயனளிப்பதல்ல, எதிர்கால சந்ததியினருக்கும் தான் என்பது நிதர்சனமே.