"மாயக்குரலோன்” சித் ஸ்ரீராம் – பிறந்தநாள் ஸ்பெஷல்

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் என்று கவிஞர் வாலியின் வைர வரிகளைப் போலவே சில பாடல்களை கேட்டால் நம்மையே மறந்து சிலாகிப்போம்…ஆம்..அந்த பாடல்களின் பின்னணி குரல் நம்மை அப்படியே வசீகரிக்கும். அப்படிப்பட்ட மாயக்குரலுக்கு சொந்தக்காரர் “சித் ஸ்ரீராம்”. இவர் வருஷத்துக்கு 2 பாட்டு பாடினாலும் அது அடுத்த 20 வருஷத்துக்கும் கேக்குற மாதிரி இருக்கும். காரணம் பாட்டல்ல. இவரின் குரல். அவருக்கு இன்று பிறந்தநாள்.

சென்னையில் 1991ல் பிறந்த சித் ஸ்ரீராமின் தாயார் சான் பிரான்சிஸ்கோ நகரில் கர்நாடக இசை ஆசிரியர். இவருடைய தாத்தாவும் இசை கலைஞர் என்பதால் இசை அவருடன் சேர்ந்தே பிறந்துள்ளது.

3 வயதிலேயே கர்நாடக இசையை சிறிது சிறிதாக கற்க ஆரம்பித்த சித் ஸ்ரீராம், தனது 11 வயதில் முழு மூச்சாக இசையை கற்றார். 2008ல் அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள பெர்க்லீ இசைக்கல்லூரியில் பயின்றதன் பலனாக 2010ல் சொந்தமாக பாடல்கள் எழுதி , இசையமைத்து அதனை வீடியோவாகவும் வெளியிட்டு வந்தார். அவ்வப்போது மார்கழி மாத உற்சவத்திலும் பாடுவதை வழக்கமாக்கி கொண்டார் சித் ஸ்ரீராம்.

2011ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் “அடியே…அடியே” பாடல் மூலம் திரையுலகில் தனது அடியெடுத்து வைத்தார் சித் ஸ்ரீராம். நிச்சயம் பாட்டின் பின்னணி குரல் அனைவரையும் அவரின் பின்னால் அடி போட வைத்தது என்றே சொல்லலாம். 4 மணி நேரத்தில் பாடப்பட்ட அந்த பாடல் ஸ்கைப் மூலம் ரெக்கார்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்பிறகு அவர் 2014ல் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ஐ” படத்திற்காக “என்னோடு நீ இருந்தால்” பாடலை பாடினார். அதிலும் “நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே” என உருகி பாடும்போது சொக்கித்தான் போனார்கள் சினிமா ரசிகர்கள். இந்த பாடலுக்காக அவருக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் அவார்ட் கிடைத்தது. அதன் பிறகு சித் ஸ்ரீராம் இல்லாத காதல் பாடல்களே இல்லை என்பதை ஒவ்வொரு பாடலிலும் மூலமாகவும் தனித்து தெரிய வைத்தார்.

2015ல் “நானும் ரௌடி தான்” படத்தில் இடம்பெற்ற “எனை மாற்றும் காதலே” பாடலில் தடுமாறி போனார்கள் காதலர்கள். இந்த பாடலும் ஸ்கைப் மூலமாகவே ரெக்கார்ட் செய்யப்பட்டது. மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “24” படத்தில் “மெய் நிகரா” பாட்டாகட்டும், “கட்டப்பாவை காணோம்” படத்தில் வந்த “ஹே பெண்ணே..பெண்ணே..” பாட்டாகட்டும் நம்மை சித் ஸ்ரீராமின் முழு நேர ரசிகனாக மாற்றியது என்பதில் மாற்று கருத்தேயில்லை.

இந்த இசையுகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் சித் ஸ்ரீராமின் மாயக்குரலை மெருகேற்றி அழகுப்பார்த்தவர். அதற்கு மகுடமாக அமைந்த பாடல் “அச்சம் என்பது மடமையடா” படத்தில் வந்த “தள்ளிப்போகாதே” பாடல். பாடலை முணுமுணுக்காதவர்கள் இல்லை என்பது போல் மீண்டும் மீண்டும் கேட்டு பைத்தியமாகித்தான் போனார்கள் தமிழ்நாட்டின் இளைஞர்களும், இளைஞிகளும்.

டிக்..டிக்..டிக் படத்தின் குறும்பா என்கிற மகனை மெச்சுகிற பாட்டும்….விஸ்வாசம் படத்தின் “கண்ணான கண்ணே” என்னும் மகளை கொஞ்சுகிற பாட்டும் இவரின் குரலின் வழியே பெற்றோர்களை புல்லரிக்க வைத்தது உண்மை என்றால் அதுவே சித் ஸ்ரீராமின் வளர்ச்சி.

எனை நோக்கி பாயும் தோட்டாவில் இடம் பெற்ற “மறுவார்த்தை பேசாதே”,“விசிறி” ஆகிய பாடல்களை பாடினார். இதுவரை தியேட்டர்களில் ரீலிசாகாத இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி 4 வருடங்கள் தாண்டியும் ஒவ்வொரு ஆண்டும் டாப் பாடல்களின் வரிசையில் இடம் பிடிக்கிறதென்றால் அது இந்த மாயக்குரலின் மகிமை தான்.

காதலர்களின் ஐகானாகவே மாறிப்போன சித் ஸ்ரீராம், பியார் பிரேம காதலில் “ஜன்னல் ஓரமாய்”, சர்காரில் “OMG பெண்ணே”, 2.0வில் “இந்திரலோகத்து சுந்தரியே”,தடம் படத்தில் “இணையே”, வடசென்னையில் “என்னடி மாயாவி நீ”என நான் ஸ்டாப்பாய் ரொமான்ஸ் பண்ணினார்.

இதில் என்னடி மாயாவியை கேட்கும் போது அவரின் குரலில் கிறங்கி நாம் கற்பனையில் வேறு உலகத்தில் பயணிப்போம். மேலும் ஆங்கிலத்தில் இண்டிபெண்டண்ட் ஆல்பங்களும் நிறைய பண்ணியிருக்கிறார். தமிழில் “கண்ணில் மழை”,“காதல்” என தொடங்கும் ஆல்பம் பாடல்களில் தன் குரலை வெளிப்படுத்தியுள்ளார்.

அடுத்ததாக என்ஜிகே படத்தில் “அன்பே…பேரன்பே” என அடுத்த ஹிட் பாடலை கொடுத்து கொண்டாடப்பட்டு வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளின் காற்றில் இவரின் கீதத்தை ஒலிக்க விட்டுள்ளார். அதிலும், தெலுங்கில் “கீதா கோவிந்தம்” படத்தில் இடம்பெற்ற “இங்கெம் காவாலே” பாடலுக்கு மொழிப்பற்று கடந்த ரசிகர்கள் உண்டெனில், காரணம் சித் ஸ்ரீராம் மட்டுமே.

இப்படி விதவிதமாக மாயாஜாலம் செய்யும் சித் ஸ்ரீராமுக்குள் ஒரு இசையமைப்பாளர் ஆசை ஒளிந்துள்ளது. வாய்ப்பு வந்தால் நிச்சயம் செய்வேன் என அதற்காக தன்னை தகுதிப்படுத்தி கொண்டிருக்கிறார்.சீக்கிரம் கனவுகள் மெய்ப்படட்டும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்.

 

 

 

Exit mobile version