உடல்நிலை பாதிக்கப்பட்ட தாயை மகன் தெருவில் விட்டதால் உயிருக்கு போராடி நிலையில் இருந்த அவரை, வருவாய் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தூத்துக்குடியில் உள்ள பங்களா தெருவை சேர்ந்த சீனி என்பவர், நோய் வாய்பட்ட தனது தாயை வீட்டின் வெளியே விட்டுள்ளார். 7 நாட்களாக இரவு, பகலாய் மழையில் நனைந்தபடி உயிருக்கு போராடிய அந்த மூதாட்டி குறித்து அக்கம்பக்கத்தினர் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த செய்தியாளர்கள் அங்கு விரைந்து சென்று மூதாட்டியை மீட்டனர்.
இதனையடுத்து கோட்டாட்சியரை தொடர்பு கொண்டு மூதாட்டி நிலைமை குறித்து தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகளால் மீட்கப்பட்ட அந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூதாட்டியை மீட்டு உடனடியாக சிகிச்சைக்கு அளிக்க நடவடிக்கை எடுத்த செய்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.