நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது!!

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. மேலும், கோயில்களில் வழக்கமான நித்திய பூஜைகள் அனைத்தும் நடைபெற்று வந்தன. பொது முடக்கம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இன்று முதல் வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள், மால்கள் திறக்கப்பட உள்ளன. வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 80 நாட்களுக்கு பிறகு வழிபட்டு தலங்கள் திறக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதற்கட்டமாக தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். மேலும், வரும் 11ம் தேதி முதல் வெளியூர் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குருவாயூர் கிருஷ்ணன் கோயில் நாளையும், சபரிமலை ஐயப்பன் கோயில் வரும்14ம் தேதி மாலை 5 மணிக்கும் திறக்கப்படுகின்றன.

கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுவது குறித்து இன்னும் முடிவு எடப்படவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் மக்கள் அதிகம் கூடும் இடமான வழிபாட்டு தலங்கள் திறக்க வாய்ப்பு இல்லை என நீதித்துறை துறை செயலாளர் ராஜேந்திர பகவத் தெரிவித்துள்ளார். 

இதே போன்று, ஒடிசாவில் வழிபாட்டு தலங்கள் வரும் 30ம் தேதி வரை திறக்கப்பட மாட்டாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடமான ஷாப்பிங் மால்களையும் திறக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version