இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்: முதலமைச்சர்

இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். பிரசாரத்தின் 2-ஆம் நாளான நேற்று வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கஸ்பா மூர்த்திக்கும், கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கும் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இடைத்தேர்தல் வரக் காரணமான துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என கேட்டுக்கொண்டார். இஸ்லாமிய சகோதரர்களுக்கு தொழில் தொடங்க உதவி, ஹஜ் யாத்திரைக்கு 6 கோடி வரை நிதியுதவி அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

சிறுபான்மையின மக்களுக்கு அரணாக இருப்பது அதிமுக அரசு என்றும் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக, நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் அதிமுக உறுப்பினர்கள் என்பதை நினைவுபடுத்தினார்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி என்று முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். தேர்தல் முடிவுற்ற பிறகு, அறிவித்தபடி அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.

தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத கட்சியைச் சேர்ந்தவர்களை பிரதமராக்க ஸ்டாலின் முயல்கிறார் என்றும் திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அனைத்தும் பொய்யானது என்று முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.

திமுக ஒரு கம்பெனி என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் அதிமுக அரசு செய்து கொடுக்கும் என்று உறுதி அளித்தார்.

தர்மம் வெல்ல வேண்டும் என்றால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டார். ஏழை எளிய மாணவர்கள் விஞ்ஞான கல்வி பெற மடிக்கணினி தந்த அரசு அதிமுக அரசு என்பதை சுட்டிக் காட்டினார்.

சாதிக் பாட்ஷாவின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனக் கூறிய முதலமைச்சர், திமுகவினர் அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாக சாடினார். மேலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அனைத்து ஏரிகளும் தூர்வாரப்படும் என்று உறுதியளித்தார்.

ஏழைக்கர்ப்பிணி பெண்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கான அம்மா பாதுகாப்பு பெட்டகம் வழங்கி வருவதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து 2-வது நாள் தேர்தல் பிரசாரத்தை அவர் நிறைவு செய்தார்.

Exit mobile version