மதுரை டோல்கேட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் கைது

மதுரை டோல்கேட்டில் துப்பாக்கி சூடு நடத்திய பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் 5 பேர் உட்பட இவர்களுக்கு உதவிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள சுங்கச்சாவடியில் திருநெல்வேலியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற காரில் 6 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் காரில் வந்தவர்களை கட்டணம் செலுத்துமாறு கூறியபோது ஊழியருக்கும், காரில் வந்தவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். உடனே ஊழியர்கள் துரத்தி சென்றபோது அரியமங்கலம் அருகே சசிக்குமார் என்ற இளைஞர் கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஊழியர்களை மிரட்டும் நோக்கில் தரையில் சுட்டுவிட்டு 5 பேர் தப்பியுள்ளனர். இதில் சசிக்குமார் மட்டும் சிக்கிய நிலையில் அவர் திருமங்கலம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் மதுரை- உசிலம்பட்டி சாலையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் 6 பேரும் சிக்கினர். அவர்களிடமிருந்து 4 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள்,14 செல்போன்கள், அவர்கள் அணிந்திருந்த 45 பவுன் தங்கநகை மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு உதவிய ரகுபதி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியும் கைது செய்யப்பட்டனர்.

Exit mobile version