மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2வது 20 ஓவர் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஷிவம் துபே, அதற்கு காரணம் மூத்த வீரர் ஒருவரிடம் இருந்து தனக்கு கிடைத்த உந்துதல் தான் என கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்திய அணி 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 54 ரன்கள் எடுத்தார். பின்னர் அபாரமாக விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று போட்டி கொண்ட இருபது ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது.
இந்திய அணியில் எப்போது முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் கேப்டன் விராட் கோலி களமிறங்குவார். ஆனால், நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா வெளியேறிய உடன் இளம் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே களமிறங்கினார். தொடக்கத்தில் தடுமாறிய துபே, பிறகு அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 30 பந்துகளில் 54 ரன்கள் (3 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். இந்த போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் எட்டுவதற்கு, அவரது இன்னிங்ஸ் பெரிதும் உதவியது.
இந்நிலையில், இந்திய அணி துணை கேப்டன் ரோகித் சர்மாவின் அறிவுரை, மூன்றாவது இடத்தில் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்வதற்கு உதவியது என்று துபே தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கு 3-வது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்ததது. இது எனக்கு மிகப்பெரிய விஷயமாக நான் கருதுகிறேன். நீ அமைதியாக இருந்து உன் பலத்தை காட்டு என்று ரோகித் சர்மா கூறினார்.அவர் கூறிய வார்த்தைகள் தான் எனக்கு கிடைத்த உந்துதல் என நினைக்கிறேன்.நிச்சயம் ஒரு மூத்த வீரரிடம் இருந்து சக வீரருக்கு இதுபோன்ற உந்துதால் தான் தேவை. பின்னர், எனக்கு கிடைத்த முதல் சிக்சர், நான் நன்றாக விளையாட காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.