170 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறிக் கொள்ளும் சிவசேனா கட்சித் தலைவர்கள், ஆட்சியமைக்க உரிமை கோரி மகாராஷ்டிர ஆளுநரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக – சிவசேனா இடையே யாருக்கு முதலமைச்சர் பதவி என்பதில் பிடிவாதம் இருப்பதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.
முதல் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் பதவியைத் தங்களுக்குத் தர வேண்டும் எனக் கோரி வரும் சிவசேனா கட்சி, இனி பாஜகவுடன் பேச்சு நடத்துவதாக இருந்தால் முதலமைச்சர் பதவி பற்றி மட்டுமே பேச்சு எனக் கூறிவிட்டது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத், தங்களுக்கு 170 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். சஞ்சய் ராவுத் மற்றும் சிவசேனா மூத்த தலைவர்கள் இன்று ஆளுநர் பகத்சிங் கோசியாரியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளனர். தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் எட்டாம் தேதியுடன் முடிவடைவதால் அதற்குள் ஆட்சியமைக்க ஆளுநர் யாருக்கு அழைப்பு விடுப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.