மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா எம்.பி.அரவிந்த் சாவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவும், சிவசேனா கட்சியும் இணைந்து களம் கண்டது. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, இருகட்சியினரிடையும் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பது குறித்த சிக்கல் ஏற்பட்டதால், தொடர்ந்து இழுபறி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் எதிர்க்கட்சியினருடன் சில ஆலோசனைகளை மேற்கொண்டது. அதில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினால், ஆதரவு அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி நிபந்தனை விதித்தது. இத்தகைய அரசிய சூழலில் கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறையின் அமைச்சராக இருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சாவத் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.