பாஜகவுடன் கூட்டணி தொடர நிபந்தனை விதிக்கும் சிவசேனா

பாஜகவுடன் கூட்டணி தொடர வேண்டுமென்றால் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது. பாஜகவுடன் சிவசேனா கட்சி கூட்டணி வைத்துள்ளது. மகாராஸ்டிரா மாநிலத்தில் இவ்விரு கட்சிகளும் இணைந்து பெரும்பாலான நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றின. சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் சமீப காலமாக சிவ சேனா கட்சி, பாஜக-வை கடுமையாக விமர்சித்தும் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தியை பாராட்டியும் வருகிறது. குறிப்பாக ரபேல் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவத், பாஜக கூட்டணி அகராதியில் இருந்து சிவசேனா இன்னும் விலகவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளாராக அறிவித்தால் பாஜகவை ஆதரிக்க தயங்க மாட்டோம் என அவர் கூறியுள்ளார். பாஜக சார்பில் பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமர் வேட்பாளர் என அக்கட்சியினர் கூறி வரும் நிலையில் சிவசேனாவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version