பாஜகவுடனான கூட்டணி முறிவை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சி வரிசையில் சிவசேனா

பாஜகவுடனான கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, மாநிலங்களவையில் சிவசேனா கட்சி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்கின்றனர்.

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், வெற்றிக்கு பிறகு ஆட்சி அமைப்பதில் இருகட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இரண்டரை ஆண்டுகாலம் முதலமைச்சர் பதவி வேண்டும் என்ற சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க பாஜக மறுத்து விட்டதால் கூட்டணி முறிந்தது. மத்திய அமைச்சர் பதவியை சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்ததை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது.

இந்த நிலையில், நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவையில் சிவசேனா எம்.பி.க்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளனர். இதற்காக சிவசேனா எம்.பி.களுக்கான இருக்கைகள் எதிர்க்கட்சி வரிசையில் மாற்றப்பட்டுள்ளன.

Exit mobile version