இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம் ஷிம்லா. ஷிம்லா, வட இந்திய மாநிலமான இமாச்சல் பிரதேசத்தின் தலைநகரமாகும். 1864 ஆம் ஆண்டு காலவாக்கில் இந்தியாவை ஆட்சி செய்துகொண்டிருந்த பிரித்தானியர்கள் சிம்லாவை தங்களின் கோடைகாள தலைநகரமாக அறிவித்தனர். விடுதலைக்குப் பிறகு இந்த நகரம் கிழக்கு பஞ்சாபின் தலைநகரமாக இருந்தாலும் தற்போது இமாச்சல் பிரதேசத்தின் பகுதியாக உள்ளது. சிம்லா, இமாச்சல் பிரதேசத்தின் தலைநகரமாக மட்டுமன்றி, கலாச்சார நகரமாகவும், வணிக நகரமாகவும், கல்வி மையமாகவும் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சிம்லாவனது 2,276 மீட்டரில்(7,467 அடி) அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிம்லாவில் ஆண்டிற்கு சராசரி காலநிலை வெறும் 17 டிகிரி செல்சியஸ் மட்டும்தான். மேலும் குளிர்காலத்தில் 6 முதல் 7 டிகிரி செல்சியஸ் அளவில் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் சிம்லாவில் இன்றைக்கு புதிய பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. சிம்லா மாவட்டமே பனிப்போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. இதனை ஒட்டி அதிக அளவிற்கு சுற்றுலாப் பயணிகள் சிம்லாவை நோக்கி படையெடுத்துள்ளனர். இந்தியாவிலிருந்து மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் அதிக அளவிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதனால் இமாச்சல பிரதேசத்தின் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (HPTDC) வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாற்பது சதவீதம் தள்ளுபடியை வழங்க முடிவு எடுத்துள்ளது. மேலும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாதிருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.