இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாடக நடிகராகவும், ஒப்புயர்வற்ற சங்கீத மேதையாகவும், அப்பழுக்கற்ற தேசியவாதியாகவும் திகழ்ந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் 115வது பிறந்ததினம் இன்று….
எஸ்.ஜி. கிட்டப்பா என்றழைக்கப்பட்ட கங்காதரன் கிட்டப்பா, 1906ம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்தார்.
வறுமை காரணமாக, தனது 6வது வயதில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடக குழுவில் சேர்ந்தார். அதன்பின்னர் கன்னையா நாடக கம்பெனியில் சேர்ந்த அவர், சிறுசிறு பாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். நடிகராக ஜொலித்த அவர், இசையிலும் இருந்த ஞானத்தால் விரைவில் உச்சத்திற்கு சென்றார்.
அவரது குரலில் ‘காயாத கானகத்தே’ என்ற வள்ளி நாடகப் பாடலும், ‘கோடையிலே இளைப்பாற்றி’ என்ற வள்ளலாரின் விருத்தமும், ‘எவரனி’ என்ற கீர்த்தனையும், ரசிகர்களை அசரடித்தன.
இயல்பிலேயே சங்கீத நிபுணத்துவம் பெற்றிருந்த அவர், ஐந்து அல்லது ஆறு கட்டைகளிலும் மிகச் சாதாரணமாக பாடி, பார்வையாளர்களை பரவசத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்வார்.
கிட்டப்பா நடிக்கும் நாடக அரங்கில், வியக்க வைக்கும் அவரது அமர கானத்தை கேட்க ரசிகர்களோடு சங்கீத வித்துவான்களும் அலைமோதுவார்களாம். அதேசமயம் நடிப்பிலும் அவரது பாய்ச்சல் சிறிதும் கூட குறைந்துவிடவில்லை.
இலங்கை, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளிலும், கிட்டப்பாவின் நாடகங்களுக்கு பெரும் வரவேற்புகள் இருந்தன.
அதிலும், கிட்டப்பா, சுந்தராம்பாள் இருவரும் மேடையேறி விட்டால், அரங்கத்தின் அதிர்வலைகள் ஓய்வதற்கே பல மணி நேரம் ஆகும். இருவரும் இணைந்து நடித்த ‘வள்ளி திருமணம்’, ‘நந்தனார்’, ‘கோவலன்’, ‘ஞானசவுந்தரி’ ஆகிய நாடகங்கள், இந்த ஜோடியை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.
கலைவானில் மின்னல் போல தோன்றிய கிட்டப்பா தனது 27-வது வயதிலேயே அகால மரணமடைந்தார்.
நீண்ட நெடிய கலைப்பயணத்தில் ஈட்டக்கூடிய பெருமைகளையும் புகழையும், குறுகிய காலங்களில் சாத்தித்துக்காட்டிய தன்னிகரற்ற நாடகக் கலைஞன் எஸ்.ஜி.கிட்டப்பாவின் பிறந்ததினத்தை நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறது உங்கள் நியூஸ் ஜெ.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக அப்துல் ரஹ்மான்…