அரசு பள்ளியில் படித்து தற்போது நாகை அருகே துணை வட்டாட்சியராக இருக்கும் ஒருவர், தன் குழந்தையையும் அரசு பள்ளியில் சேர்த்துள்ளது பொதுமக்களிடம் வெகுவான பாராட்டுதலை பெற்றுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். தற்போது, திருக்குவளை துணை வட்டாட்சியராகப் பணியாற்றி வருகிறார். வேதாரண்யத்தில் பிறந்து, வடமழை ரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தன் படிப்பைத் தொடங்கி, உயர்கல்வி படித்து அரசு துறையில் முக்கியப்பணியில் உள்ளார். இந்த நிலையில் தன் 5 வயது மகனான நன்னெறியாளனை, தான் இளமையில் படித்த அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளார். தான் படித்த பள்ளியையும் மறக்காமல், தன் மகனையும் அரசு பள்ளியில் சேர்த்த துணை வட்டாட்சியர் ரமேஷின் செயல் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
துணை வட்டாட்சியர் ரமேஷ், அரசு பள்ளியைத் தேர்ந்தெடுத்து, தன் மகனை படிக்க வைத்துள்ளது கல்வி துறைக்கு புகழையும், பெருமையும் தந்துள்ளது என்றும், கல்வி துறையில் மிகப்பெரிய மாற்றத்திற்கு தமிழக அரசு வித்திட்டுள்ளதாகவும், வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலர் தாமோதரன் கூறியுள்ளார்.