ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் பயன்படுத்திய ஒரு தொப்பி, இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய்ககு ஏலத்தில் விற்கப்பட்டு உள்ளது. கிரிக்கெட் நினைவுப் பொருட்களின் வரலாற்றில் மிக அதிக விலைக்கு விற்கபட்ட நினைவுப் பொருள் என்ற அங்கீகாரத்தை இந்த தொப்பி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 லட்சம் ஹெக்டேர் பரப்புள்ள காட்டுப் பகுதிகள் தீயில் எரிந்து சேதமாகின. பல லட்சக் கணக்கான விலங்குகளும் பல மனிதர்களும் இதனால் உயிரிழப்பை சந்தித்து உள்ளனர். ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து உள்ளனர். இந்நிலையில், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்கள் பொருட்களை ஏலத்தில் விற்று வருகின்றனர்.
அந்த வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரும், டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளவருமான ஷேன் வார்னே கிரிக்கெட் ஆட்டங்களில் தான் பயன்படுத்திய ‘பேகி கிரீன்’ என்ற பிரபலமான தொப்பியை ஏலத்திற்கு வழங்கியுள்ளார்.
இந்த தொப்பியை வாங்க ஆன்லைன் வாடிக்கையாளர்களிடையே கடும் போட்டி நிலவியது, இறுதியில் இந்தத் தொப்பி 10 லட்சத்து 7 ஆயிரத்து 500 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு விலை போனது, இந்தத் தொகை இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 5 கோடி ரூபாய்க்கு சமமானது ஆகும். கிரிக்கெட் பொருள் ஒன்றுக்கு ஏலத்தில் கிடைத்த மிக அதிகவிலையாக இதுவே உள்ளது.
முன்னதாக உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன் பயன்படுத்திய தொப்பி ஒன்று கடந்த 2003ஆம் ஆண்டில் 3 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது, அந்த சாதனையை ஷேன் வார்னின் தொப்பி முறியடித்து உள்ளது. இதற்காக ஷேன் வார்ன் தனது ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்து உள்ளார்.