விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று புதுச்சேரியில் வேறொருவரை திருமணம் செய்து வசித்து வருகிறார். பெண்ணின் இரு மகள்களும் திண்டிவனத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்த நிலையில், அண்டை வீட்டை சேர்ந்த துரை என்பவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மேலும், அவருடைய மகன் மோகன் மற்றும் மோகனின் நண்பர்களும் சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதை அறிந்த சிறுமிகளின் தாயார் அவர்களை புதுவைக்கு அழைத்து சென்றார். இந்தநிலையில், மூத்த சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஆசிரியர் விசாரித்தபோது நடந்த கொடூரங்களை சிறுமி கூறியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, போக்சோ சட்டத்தின் கீழ் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த உறவினர்களான துரை மற்றும் மோகன் ஆகிய இருவரையும் திண்டிவனம் மகளிர் காவல் நிலைய காவலர்கள் தற்போது கைது செய்துள்ளனர்.