பாடலாசிரியர் வைரமுத்து, திமுகவின் நட்சத்திர பேச்சாளர் ராதாரவி ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை இளம்பெண்கள் சிலர் சுமத்தி இருப்பதும், அதற்கு நடிகைகள் சிலர் ஆதரவு தெரிவித்து இருப்பதும் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பத்திரிகையாளர் சந்தியா என்பவர் நேற்று தமது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அதில் இளம்பெண் ஒருவர் தமது 18-வது வயதில் பாடலாசிரியர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக எழுதியிருந்தார்.
அந்த இளம்பெண்ணை வைரமுத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், அவர் செய்வதறியாது திகைத்து ஓடிவந்து விட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
உடனடியாக அந்த ட்வீட்டை பத்திரிகையாளர் சந்தியா தமது பக்கத்தில் இருந்து நீக்கி விட்டார்.
ஆனால் அந்த பதிவுக்கு தமது டவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து இருந்தார் பாடகி சின்மயி.
பாடலாசிரியர் வைரமுத்து எப்படிப்பட்டவர் என்பது திரையுலகில் அனைவருக்கும் தெரியும் என்றும் கூறியிருந்தார்.
ஹாலிவுட் படவுலகில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் நடிகைகள் METOO என்ற #TAG மூலமாக ட்விட்டர் பக்கத்தில் குற்றச்சாட்டுக்களை கூறிவருகின்றனர்.
அதேபாணியில் METOOINDIA என்ற #TAG மூலம் நடிகை வரலட்சுமியும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியர் வைரமுத்துவைப் போன்றே திமுகவின் நட்சத்திரப் பேச்சாளரும், நடிகருமான ராதாரவி மீதும் இளம்பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளதாக நடிகை வரலட்சுமி தமது பதவில் கூறியுள்ளார்.
பாடகி சின்மயி, நடிகை வரலட்சுமி ஆகியோரின் கருத்துக்கு நடிகை சமந்தாவும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தி படவுலகில் வில்லன் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறியது பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், தமிழ் படவுலகிலும் பாலியல் சீண்டல்கள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.