பாலியல் புகாரில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி – சர்ச்சையில் ஆசிரியர்கள்

சென்னை சேத்துப்பட்டு பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து, கீழ்ப்பாக்கம் போலீசார் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர். இது குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு.

சென்னை, கே.கே நகர் பகுதியில் இயங்கிவரும் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பணிபுரிந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், கடந்த பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் எழுந்தது. அந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், தற்போது மற்றொரு பள்ளியிலும் வெடித்துள்ளது ஆசிரியரின் பாலியல் தொல்லை விவகாரம்.

சென்னை, சேத்துப்பட்டு பகுதியில், மகரிஷி வித்யா மந்திர் எனும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயின்ற மாணவிகள், வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் என்பவருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் புகார்களை கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். குற்றச்சாட்டுகளை முன்வைத்த மாணவிகளுக்கு, பள்ளி நிர்வாகம் எந்தவித முறையான பதிலையும் சொல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் முன்னாள் மாணவிகள், குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித் துறை செயலர், பள்ளி நிர்வாகம் ஆகியவற்றிற்கு, ஆசிரியர் ஆனந்த் மீது புகார்களை தெரிவித்து விரிவாக கடிதம் எழுதி உள்ளனர்.

இதனை அடுத்து, ஆசிரியர் ஆனந்தை பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆனந்துக்கு எதிராக பள்ளி மாணவிகள் அளித்த ஒவ்வொரு புகாரையும், நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் விசாரிக்கும் வகையில் குழு அமைக்கப்படும் எனவும், பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் மாணவிகள், பள்ளி ஆசிரியர் ஆனந்த் குறித்து சமூக வலைதளங்களில் தெரிவித்த தகவல்கள், குற்ச்சாட்டுகளை சேகரித்து, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக, முன்னாள் மாணவிகளிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், பள்ளி நிர்வாத்திடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மாணவிகள், ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்களை கொடுத்து வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version