சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 62 ஆயிரத்து 682 வழக்குகள் தீர்வுக்கு காண எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. உயர் நீதி மன்றம் வளாகத்தில் 10 அமர்வுகளும்,உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் 8 அமர்வுகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில், கிரிமினல், காசோலை, வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் மற்றும் குடும்ப நீதிமன்ற வழக்குகள் உட்பட, பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நிலுவையில் உள்ள 6 ஆயிரத்து 114 வழக்குகள், தீர்வு காண எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும், 2 ஆயிரம் வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமையில் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்று வருகிறது. இதில் எளிதில் தீர்வு காணக்கூடிய மாற்றுமுறை ஆவணச் சட்டம், வசூலிப்பு மோட்டார் வாகன விபத்து, பணியாளர் தகராறு , குடும்ப நலம், நிலம் கையகப்படுத்துதல் வருவாய் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 11 அமர்வுகளில் நடைபெற்ற விசாரணையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மூலம் சாலை விபத்தில் பலியான உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. மாவட்ட நீதிமன்றம், விளாத்திக்குளம், கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட 14 அமர்வு நீதிமன்றங்களில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 3 ஆயிரத்து 705 நீதிமன்ற வழக்குகள், 924 வங்கி வழக்குகள் என மொத்தம் 4 ஆயிரத்து 629 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.