நீலகிரி மாவட்டம் முதுமலையில், தீ தடுப்புக்கோடு அமைக்கும் பணி இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியல் வனக் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் 200 பேர் ஈடுபட்டுள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், தற்பொழுது வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளால் வனத்தீ ஏற்படுவதைத் தடுக்க, காய்ந்த செடிகள், சருகுகளை எரித்து, சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்புக்கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர் 200 பேர் ஈடுபட்டுள்ளனர். மேலும், விலங்குகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதுமலையில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க, சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டுநர்களும் ஒத்துழைக்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தீ ஏற்பட்டாலும், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வனப்பகுதிக்குள் அனுமதியின்றி யாரும் செல்லக் கூடாது எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.