தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானத்திற்குப் பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் 2020-21 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 14ம் தேதி தாக்கல் செய்தார். அதன் பின்னர், நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்று கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்துவதற்காக, சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. பேரவை கூடியதும், முன்னாள் உறுப்பினர் சந்திரன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சரும், அவை முன்னவருமான க.அன்பழகன், உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை வரும் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.