தொடர் செயின் பறிப்பு சம்பவம்: 10 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

சென்னையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் சென்று மனிதாபிமானமின்றி சங்கிலி பறிப்பு சம்பவங்கள் ஈடுபட்டவர்களை தனிப்படை அமைத்த 10 மணி நேரத்தில் முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையர்களை விரைந்து கைது செய்த போலீசாருக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

சென்னை மக்கள் பாதுகாப்புடன் இருக்க 2 லட்சத்து 50 ஆயிரம் கேமராக்களை காவல்துறை பொருத்தியுள்ளது. அதற்கு மூன்றாவது கண் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாம் தூங்கினாலும் மூன்றாவது கண் கண்காணிக்கும்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சுதாதேவி, வடக்கு குளக்கரை தெரு தபால் நிலையம் அருகே நடந்து சென்றபோது அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் 2 பேர், சுதாதேவியை தாக்கிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் நகை அறுத்துச் சென்றனர்.

அதே கொள்ளையர்கள் தேனாம்பேட்டை அருகே நடந்து சென்ற இளம் பெண்ணின் சங்கிலியை பறிக்க அவர் துடிதுடிக்க கீழே விழுந்தார். மயிலாப்பூரில் சாந்தா என்ற பெண்ணை தாக்கிய மர்ம நபர்கள் ஒரு சவரன் செயினை பறித்துச் சென்றனர். ராயப்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கி செயின் பறிக்க முயற்சி செய்தனர்.

கோட்டூர்புரம், ஏரிக்கரை சாலை நடந்து சென்ற செல்வி என்ற 48 வயது பெண் திருமணத்திற்காக வீட்டுக்கு வரும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் செயினை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதால் செயினை பறிக்க முடியவில்லை என்ற ஆத்திரத்தில் செல்வியை தாக்கிவிட்டுச் தப்பிச் சென்றனர்.

மயிலாப்பூர் துணை ஆணையர் மயில்வாகனன் மேற்பார்வையில் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் தலைமையிலான தனிப்படை அமைத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். தனிப்படை அமைத்த 10 நேரத்தில் முக்கிய நபரான ராகேஷ் என்பவரை தனிப்படையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள அண்டா சீனுவை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ராகேஷ் மீது 2016ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கு பதிவாகி உள்ளது. அப்போது 18 வயதைக்கூட தாண்டவில்லை என தெரிகிறது. சிந்தாரிப்பேட்டை மற்றும் பெரியமேடு ஆகிய இடங்களில் சங்கிலிப் பறிப்பு
வழக்குகளும் ராகேஷ் மீது உள்ளன. தலைமறைவாக உள்ள அண்டா சீனு, செயின் பறிப்பு போன்ற பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version