போட்டி ஆரம்பித்த சில நொடிகளிலேயே பார்வையாளர்களை வசப்படுத்தும் சில விளையாட்டுகளில் தென் கிழக்கு ஆசியாவில் தோன்றிய செபாக் டக்ரோ விளையாட்டுக்கு முக்கிய இடமுண்டு.
தென்கிழக்கு ஆசியாவில் பிரபலமான இந்த விளையாட்டு, கிட்டதட்ட வாலிபால் விளையாட்டை போலவே விளையாடப்படுகிறது. விதிமுறைகளும் கிட்டத்தட்ட வாலிபாலை போலவே அமைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் தங்கள் கால்கள், முழங்கால்கள், மார்பு மற்றும் தலையைப் பயன்படுத்தி விளையாடுகின்றனர்.
15 ஆம் நூற்றாண்டில் மலேசியாவில் செபாக் டக்ரோ தோன்றியது. அப்போது பிரம்பால் நெய்யப்பட்ட பந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. ஒருமுறை அந்நாட்டின் மன்னராக இருந்த ராஜா முஹம்மது என்பவரும், அமைச்சர் டன் பெரக் என்பவரின் மகனான டன் பெசார் என்பவரும் எதிரெதிர் அணியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது டன் பெசார் அடித்த பந்தானது ராஜா முஹமது முகத்தில் தாக்கியதாகவும் ஆத்திரமடைந்த மன்னர் களத்திலேயே டன் பெசாரவை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் வரலாறு உள்ளது.
ஆக்ரோஷம் நிறைந்து காணப்படும் இந்த விளையாட்டில் ஆண் பெண் இரு பாலரும் விளையாடும் வகையில், ரெகு மற்றும் டபுள்ஸ் ரெகு என இரு பிரிவாக விளையாடப்படுகிறது. ரெகு பிரிவில், ஒரு அணிக்கு 3 வீரர்கள் இடம் பெற்றிருப்பர். அதுவே டபுள்ஸ் ரெகு பிரிவில், அணிக்கு 2 வீரர்கள் மட்டும் இடம் பெற்றிருப்பர். ரெகு பிரிவில் ஆடும் 3 வீரர்கள் server, striker, feeder என அழைக்கப்படுகின்றனர். server க்கு பந்தை சர்வ் செய்வதே முக்கிய பணி, striker என்பவர் எதிரணியினர் அடிக்கும் பந்தை தடுக்க வேண்டும், feeder எனப்படுபவர் பந்தை முழு நேரம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். அதே வேளையில், புள்ளிகள் எடுப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பார்.
3 செட்களாக நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி இலக்காக 21 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஒரு வேளை இரு அணிகளும் தலா 20 புள்ளிகளுடன் இருந்தால் வெற்றிக்கான புள்ளிகள் 25 ஆக உயர்த்தப்படும். அதேபோல், இரு அணிகளும் தலா இரு செட்டை கைப்பற்றினால், வெற்றியை தீர்மானிக்கும் 3 வது செட்டில் வெற்றி இலக்கு 15 புள்ளிகளாக குறைக்கப்படும். காயம் அதிகம் ஏற்படும் இந்த விளையாட்டில், அணிக்கு 2 மாற்று ஆட்டக்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் டபுள்ஸ் ரெகு பிரிவில் ஆடும் 2 வீரர்களுமே 3 நிலைகளிலும் விளையாடலாம்.
1940 ஆம் ஆண்டு முதல் பல நாடுகளில் வளர்ச்சி அடைந்த இந்த விளையாட்டு 1945 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி முதன் முறையாக மலேசியாவில் நடத்தப்பட்டது. இதற்கென்று உலக கோப்பை போட்டிகள் இதுவரை நடத்தப்படாத நிலையில், சர்வதேச செபாக் டக்ரோ கூட்டமைப்பு ஆண்டு தோறும், தென் கிழக்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சர்வதேச போட்டிகளை நடத்தி வருகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டி போட்டியில், இடம்பெற்ற இந்த போட்டியில் முதல் தங்கத்தை தாய்லாந்து கைப்பற்றியது. இதனையடுத்து ஒலிம்பிக்கில் செபாக் டக்ரோவும் இடம்பெற வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.