செப். 1 முதல் அரசு பொது நூலகங்கள் திறப்பு!

அரசு பொது நூலகங்கள் வரும் ஒன்றாம் தேதி முதல் செயல்படலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், கிராம நூலகங்கள் என 4 ஆயிரத்து 638 நூலகங்கள் வரும் ஒன்றாம் தேதி முதல் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நூலகங்களும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும்,15 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நூலகத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. நூலகத்திற்கு வரும் வாசகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், முகக்கவசம் அணிதல் ஆகிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைகளை சுத்தம் செய்வதற்காக, நூலகங்களில் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும் என்றும், கைகளை சுத்தம் செய்த பின்னரே வாசகர்களை நூலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நூலக ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும், தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version