ஜூன் மாதம் செந்தில் பாலாஜி அவுட்… ஜூலையில் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கெளதம சிகாமணியும் வளையத்தில் சிக்கியுள்ளனர். அப்போ ஆகஸ்ட் மாதம் யார் என்பதுதான் கடந்த சில நாள்களாக திமுக கூடாரத்தில் எழும் கேள்வியாக உள்ளது. அதிலும் திமுகவின் சீனியர்கள் எல்லோரும் கத்தி யார் பக்கம் திரும்ப உள்ளது என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
திமுகவின் சீனியர் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அவர்களது மாவட்டங்களில் குறு நில மன்னர்களைப் போலவே செயல்பட்டவர்கள். திமுக ஆட்சிக்காலம் முழுவதும் கொள்ளை, கொள்ளையைத் தவிர வேறெதுவும் அறியாதவர்கள். அதன் பலனை இப்போது அமலாக்கத்துறை ரெய்டுகள் மூலம் அனுபவித்து வருகின்றனர்.
தலைமைக்கு நெருக்கமாக இருக்கிறார், பணம் கொழிக்கும் துறைகளை கையாண்டு வருகிறார், மாவட்ட அளவில் டாஸ்மாக்கில் வருமானம் பார்க்க அனுமதிப்பதில்லை என செந்தில் பாலாஜி மீது திமுக சீனியர் அமைச்சர்கள் ஒருவித இறுக்கத்துடனே இருந்தனர். இதன் காரணமாகத் தான் அவர் கைது நடவடிக்கைக்கு வாயளவில் கருத்து தெரிவித்தாலும், உள்ளுக்குள் குளுகுளுவென இருந்தனர் சீனியர்கள்.
காலம் காலமாக நடந்தேறும் ஊழல்..!
ஊழல், கொள்ளை, பின்னர் விசாரணை… கைது… இந்த பேட்டர்ன் ஒன்றும் திமுகவுக்கு புதிதல்ல. அதிலும் இன்று, நேற்றல்ல… காலம் காலமாகவே திமுகவுக்கும் ஜூன், ஜூலை மாதங்களுக்கும் ஏதோ ஏழாம் பொருத்தம்போல. இப்படித்தான் 2001 ஆம் ஆண்டு மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்த வழக்கில் தமிழக காவல்துறையால் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.
சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் அதேபோல ஒரு ஜூன் மாதத்தில் தான் செந்தில் பாலாஜி ரூபத்தில் திமுகவுக்கு அடுத்த ஏழரை தொடங்கியது. பணி நியமனத்தில் ஊழல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவரை நெருங்கியது அமலாக்கத்துறை. தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜி அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் நடத்திய தொடர் சோதனையின் முடிவில் கிடைக்க வேண்டிய ஆவணங்கள் கிடைத்ததும் கைது செய்ய முயற்சித்தது அமலாக்கத்துறை.
இதை எல்லாம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்ததுபோல படார் என்று நெஞ்சு வலி டிராமாவை அரங்கேற்றினார் செந்தில் பாலாஜி. சுமார் ஒரு மாதம் வரை ஓடிய அந்த டிராமா கடந்த சில நாள்களுக்கு முன்பு முடிவுக்கு வந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி.
இந்நிலையில் அவரைத் தொடர்ந்து அடுத்ததாக சிறைவாசம் அனுபவிக்க காத்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி. இம்முறை பொன்முடியோடு சேர்த்து அவரது மகனையும் கொத்தாக தூக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.
யார் இந்த பொன்முடி? அமலாக்கத்துறையின் வட்டத்தில் இவர் சிக்கியதற்கான காரணம் என்ன? பார்க்கலாம்..
விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தில் 1950 ஆம் ஆண்டு பிறந்தவர் பொன்முடி. உடன் பிறந்தவர்கள் எட்டு பேர். தாய், தந்தை இருவரும் ஆசிரியர்கள். பொன்முடி எம்.ஏ வரலாறு, பொது நிர்வாகம், சமூக அறிவியல் என படித்து முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரியில் படிக்கும்போதே திமுக மாணவர் அணியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.
17 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியவர், 1989 தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் தேர்தலிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், 1991 ஆம் ஆண்டு திமுக ஆட்சி கலைக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதிவியில் இருந்தார்.
மீண்டும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவுகிறார். அவர் மட்டுமல்ல துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியைத் தவிர யாரும் வெற்றி பெறவில்லை. மாபெரும் பெரும்பான்மையுடன் அஇஅதிமுக ஆட்சி அமைத்து முதல் முறையாக முதல்வரானார் புரட்சித் தலைவி ஜெயலலிதா. தொடர் தேர்தல்களில் எல்லாம் எம்எல்ஏவாகவும், திமுக ஆட்சி அமைத்த போதெல்லாம் மந்திரியாகவும் வலம் வந்தார் பொன்முடி.
கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் தனது மகன் கெளதம சிகாமணிக்கு செம்மண் குவாரி ஒப்பந்தம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
செம்மண் ஊழல்..!
இந்தக் குவாரியில் ஒப்பந்தத்துக்கு மாறாக லாரிகள் மூலம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு செம்மண் எடுத்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு 28 கோடியே 37 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, கடந்த 2012 ஆம் ஆண்டு பொன்முடி, அவரது மகனும் தி.மு.க. எம்.பி.யுமான கௌதம சிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் பொன்முடி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றதில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் இருந்து, தங்களை விடுவிக்கக் கோரி, பொன்முடி, கெளதம சிகாமணி, ராஜ மகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்கள் கூட்டாக சேர்ந்து அரசுக்கு அதிகளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், முடிவடையும் தருவாயில் உள்ள இந்த வழக்கில் இருந்து அவர்களை விடுவிக்க முடியாது எனவும் கூறி, 4 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கடந்த 2006-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோரை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதேபோல், கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டுகளில் சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்குச் சொந்தமான 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக பொன்முடி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த இடத்தில் சட்டவிரோதமாக குடியிருந்து வந்த கண்ணன் என்ற கண்ணப்பனை வெளியேற்றி விட்டு போலி ஆவணங்களைத் தயாரித்து பொன்முடியின் மாமியார் சரஸ்வதி பெயரில் அந்த இடத்தைப் பதிவு செய்து 35 லட்சம் மதிப்பில் அங்கு கட்டிடம் கட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்து, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு உள்ளிட்ட 10 பேர் மீது 2003ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ED-யின் அதிரடி ரெய்டு..!
இந்நிலையில் பொன்முடி விடுவிக்கப்பட்ட நில அபகரிப்பு, சொத்துக் குவிப்பு வழக்குகளில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி சென்னை, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையைத் தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள பொன்முடிக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியிலும், அமைச்சரின் மகனான கௌதம சிகாமணியின் வீடு மற்றும் அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.மேலும், கலைஞர் தொலைக்காட்சி சிஇஓ கார்த்திக் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.
சோதனையின் போது, திமுகவினர் வழக்கம்போல் அதிகாரிகளை அச்சுறுத்தும் பணிகளில் ஈடுபடத் தொடங்கினர். பொன்முடியின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம், முடிஞ்சா வீட்ட உடைச்சி பாருங்க என செல்வம் என்பவர் வாய்ச்சவடால் விடுத்தார். ஆனால், இதனை கண்டு கொள்ளாத அமலாக்கத் துறையினர் சோதனையைத் தொடர்ந்தனர். பின்னர் அவரது வீட்டில் நின்று கொண்டிருந்த சொகுசு கார்களை திறந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், டைரி உள்ளிட்ட 2 ஆவணங்களைக் கைப்பற்றினர்.
தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தியது போன்று, பொன்முடி அறையிலும் சோதனை நடத்தப்படலாம் என்பதால், தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மேலும் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி எம்.பி, வெளிநாட்டில் மேற்கொண்ட முதலீடுகள் குறித்து கணினி தரவுகளை அழித்திருக்கலாம் என்பதால் தடயவியல் நிபுணர் ஒருவர் ஆய்வுக்காக வரவழைக்கப்பட்டார்.
வீட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, அமைச்சர் பொன்முடியிடம் மட்டுமல்லாமல் அவரது மனைவி மற்றும் அவரது இரண்டாவது மகன் அசோக் சிகாமணியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையின்போது அசோக் சிகாமணியின் காரில் இருந்து இரண்டு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மருத்துவரான அசோக் சிகாமணி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். தமிழ்நாடு கிரிக்கெட் அணி, சேப்பாக்கம் மைதானம், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் என தமிழ்நாடு கிரிக்கெட்டில் நடக்கும் அனைத்துமே இவரது கன்ட்ரோலில் தான் நடக்கிறது. இந்தச் சூழலில் அவரது காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் பல தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவரான அசோக் சிகாமணிக்குச் சொந்தமான மருத்துவமனையிலும் சோதனைகள் தொடர்ந்துள்ளன.
அமலாக்கத்துறை சோதனை தீவிரமடைந்துள்ளதை கண்டு பயந்த திமுகவினர், தொடர்ச்சியாக ரெய்டு நடவடிக்கையை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் மேலும் ஒரு சொகுசு காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தததால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பொன்முடி மற்றும் அவரது மகனுக்குச் சொந்தமான 7 இடங்களில், 13 மணி நேர சோதனைக்குப் பிறகு, இரவு 8 மணியளவில் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இரண்டாம் நாளும் மாலை வரை விசாரணை தொடர்ந்தது. இதில் பொன்முடியின் வீட்டில் இருந்து 13 லட்சம் மதிப்பிலான பிரிட்டிஷ் பவுண்டுகள் உள்ளிட்ட 81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது மட்டுமல்லாமல் அவருக்குச் சொந்தமான 41.9 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், முடக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் கே.எம்.மருத்துவமனை மூலம் கிடைத்த வருமானங்கள் என விசாரணையின்போது சம்பந்தமே இல்லாமல் உளறிக் கொட்டியுள்ளார் பொன்முடி.
மேலும், செம்மண் குவாரி மூலம் தனது மகன், உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு உரிமம் வழங்கினார். மகன், உறவினர்கள், பினாமிகள் பெயரில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் குவாரிகள் இருந்தன. முறைகேட்டின் மூலம் ஈட்டப்பட்ட தொகையைக் கொண்டு நிறுவனங்கள், பிற தொழில்களில் முதலீடுகள் செய்யப்பட்டன என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
பறிமுதலில் சிக்கிய தொகை..!
இந்தோனேஷியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 2 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாக பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தோனேசிய நிறுவனம் 41.57 லட்சத்துக்கு வாங்கப்பட்டு பின்னர் 2022 இல் 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அளித்த விளக்கத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும், அவர்களுக்குச் சொந்தமான மருத்துவமனை மூலம் கிடைக்கப்பெற்றது போன்று போலியான கணக்கு மற்றும் ஆவணங்களை தயாரித்ததும் அமலாக்கத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடான கணக்கு விவரங்கள் அனைத்தும் வழக்கில் தொடர்புடைய ஒருவர் மூலம் பெறப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் கணக்கு விவரங்களுக்கு அவர்கள் சொல்லும் காரணம் நம்பத்தகுந்ததாக இல்லை. சொத்துகள், நிறுவனங்கள் வாங்கியது, பிற நிறுவனங்களில் முதலீடு செய்தது சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் நடந்திருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
செந்தில் பாலாஜி, பொன்முடிக்கு அடுத்தபடியாக அமலாக்கத்துறையின் பார்வையில் சிக்கியுள்ளவர் அனிதா ராதாகிருஷ்ணன். கடந்த 2002 முதல் 2006 ஆம் ஆண்டு வரை வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை நம்புவதால் விசாரணையைத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 6 கோடியே 50 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடக்கியது.
சொத்துக்களை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத்துறை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டால் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது அனிதா ராதாகிருஷ்ணன்..!
அதே நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்குகளை அலசத் தொடங்கியுள்ளது அமலாக்கத்துறை. அவருக்கு எதிராக தூத்துக்குடியில் நடக்கும் வழக்கில் அமலாக்கத்துறை மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் எங்களுக்கு உதவ வேண்டும். அவர்களுடன் இணைந்து நாங்கள் விசாரணை நடத்த விரும்புகிறோம் என்று தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இதன்மூலம் சொத்துக்குவிப்பு வழக்கில் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் கண்டுபிடிக்கும் ஆதாரங்களை அமலாக்கத்துறையும் ஆய்வு செய்யும். முன்னர் சேகரித்த ஆதாரங்கள், ஆவணங்களைக் கூட அமலாக்கத்துறை மறு ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
இதே நேரத்தில் ஸ்டாலினின் ரியாக்சனையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டியுள்ளது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தட்டித் தூக்கியபோது, சீண்டிப்பார்… தொட்டுப்பார்… நாங்கள் திருப்பி அடித்தால் உங்களால் தாங்க முடியாது. மிசாவையே பாத்தவர்கள் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என 10 நிமிடங்களுக்கு கேப் விடாமல் பேசி வீடியோ வெளியிட்டார்.
தூக்கம் தொலைத்த ஸ்டாலின்..!
ஜப்பான் டூர் முடிந்து நாடு திரும்பியதும் நேரடியாக மருத்துவமனை சென்று செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின், சபரீசன், சீனியர் அமைச்சர்கள் என ஒட்டுமொத்த திமுக கூடாரமும் ஓமந்தூரார் மருத்துவமனையில் தேவுடு காத்து உட்கார்ந்திருந்தனர். அவசர சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்த இதய நோயாளிகளைக் கூட சாலையில் காக்க வைத்தது விடியா அரசு. அனைத்தும் செந்தில் பாலாஜி எனும் ஒற்றை நபருக்காக…
பெரும்பாடுபட்டு பல்வேறு தில்லாலங்கடித்தனங்கள் செய்து காவேரி தனியார் மருத்துவமனைக்கு எல்லாம் மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி. ஊழலில் ஊறிப்போன ஒரு நபருக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் ஸ்தம்பித்து நின்றது. அந்த அளவுக்கு அவரது கைது நடவடிக்கையைத் தடுப்பதில் ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக இருந்தார். காரணம் செந்தில் பாலாஜி மீதான பாசம் கிடையாது. செந்தில் பாலாஜி சிக்குவதும் ஸ்டாலின் சிக்குவதும் வேறல்ல என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்ததன் காரணமே அத்தனை கொக்கரிப்புகள் அரங்கேறின.
செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால், வரிசையாக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் என ஒட்டுமொத்த குடும்பமும் உள்ளே செல்லும் நிலை ஏற்படும். எனவே அவரது வாயை அடைப்பது மூலம் தங்கள் தலைப்பாகையைக் காக்கும் முயற்சியில் ஸ்டாலின் இருக்கிறார். இல்லையென்றால் சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
ஆனால், பொன்முடி விவகாரத்திலோ ஸ்டாலின் படு சைலண்டாக இருப்பது மற்ற சீனியர் அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள புறப்பட்டபோது ரெய்டு குறித்து தகவல் வந்ததும், சட்டரீதியாக எதிர்கொள்வோம் என டெம்ப்ளேட் டயலாக்கை கூறிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகினார். சீனியர் துரைமுருகனோ, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று பாட்டு பாடி நக்கலடித்தார்.
அதிலும் பெங்களூரு புறப்பட்ட ஸ்டாலினைத் தொடர்பு கொண்ட பொன்முடி தரப்பினர், ரெய்டு குறித்து தகவல் தெரிவித்தபோது கூட, அவசரமாக பெங்களூரு சென்று கொண்டிருக்கிறேன். வழக்கறிஞர் அணி பார்த்துக்கொள்ளும் என இணைப்பைத் துண்டித்துவிட்டு, கட்சியின் சீனியர்கள் டீல் செய்துகொள்ளுங்கள் என புறப்பட்டுச் சென்றுள்ளார். இதுவே பொன்முடி தரப்பிடம் பெரும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.
பொன்முடிக்கு ஓரவஞ்சனையா?
நேற்று கட்சியில் சேர்ந்த செந்தில் பாலாஜிக்காக விண்ணுக்கும் மண்ணுக்கும் குதியோ குதியென குதித்த ஸ்டாலின், கருணாநிதி காலத்தில் இருந்து கட்சியில் இருக்கும் நம்மை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்கிறாரே என கலக்கம் அடைந்துள்ளார் பொன்முடி. பொன்முடி கட்சிக்கு விசுவாசமானவர் என்பது ஒருபுறம் இருந்தாலும், பொன்முடி மீது கட்சிக்கு இருக்கும் பாசம் இவ்வளவுதான் என காட்டும் வகையில் உள்ளது ஸ்டாலினின் நடவடிக்கைகள்.
கருணாநிதி காலம் தொட்டு கட்சியில் இருக்கும் பொன்முடிக்கே இந்த நிலை என்றால், பலமுறை கட்சித் தாவி திமுகவிடம் அடைக்கலம் புகுந்திருக்கும் அனிதா ராதாகிருஷ்ணனின் நிலையை யோசித்துப் பார்த்தால் நமக்கே பாவமாக உள்ளது.
சிக்கிய அமைச்சர் சிவசங்கர்..!
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மீதான புகார்களும் பூதாகாரமாக வெளிவரத் துவங்கியுள்ளன. பணி நியமனத்துக்கு செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதுபோல, பணியிட மாறுதலுக்கு லஞ்சம் வாங்கியுள்ளார் சிவசங்கர். 30க்கும் மேற்பட்ட போக்குவரத்துக்கு ஊழியர்களிடம் டிரான்ஸ்பர்களுக்கு என இதுவரை 12 கோடி ரூபாயை சுருட்டியுள்ளார் சிவசங்கர்.
போக்குவரத்து துறையில் மறுசுழற்சி செய்த டயர்கள் வாங்குவதிலும், டயர்கள் மறுசுழற்சிக்கான ரப்பர்கள் வாங்குவதிலும் இந்த முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களின் உயிரைப் பணயம் வைத்து அரங்கேறிய இந்த ஊழல் விளையாட்டின் தொடக்கப் புள்ளி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.
மறுசுழற்சி செய்யப்பட்ட டயர்களை வாங்குவதற்கு ELGI என்ற ரப்பர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் டயர்கள் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தான் ஓடுவதாகவும், டயர்கள் அவ்வளவு உறுதியாக இல்லை என்பதால் டயர் வெடித்து விபத்துகள் நிகழ்வதாகவும் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த 1996 காலகட்டத்தில் அமைச்சர் பொன்முடியால் அறிமுகப்படுத்தப்பட்ட கோவையைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் டயர்களின் தன்மை காரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் இந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், ராஜகண்ணப்பன் தனது இலாகா மாற்றப்படுவதற்கு முன்பு இந்த நிறுவனத்துக்கு மீண்டும் அனுமதி அளித்தார். இதையே அமைச்சர் சிவசங்கர் தொடர்ந்து வருகிறார்.
நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில், போக்குவரத்து கழக டிப்போக்களில் இருந்து டயர்களின் மைலேஜைக் குறிக்கும் ஆவணங்கள் எல்லாம் அமைச்சரின் அலுவலகத்துக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. டயர் மறு சுழற்சிக்கான மூலப்பொருட்கள் வாங்குவதிலும் சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதாகவும் சிவசங்கர் மீது புகார் வாசிக்கப்படுகிறது. தரமற்ற டயர்களால் விபத்துக்கள் ஏற்பட்டபோதும் சிவசங்கர் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஸ்டாலின் காதுக்கு இந்த விஷயம் சென்றபோது கூட அதை அசட்டை செய்துள்ளார்.
ஆட்சி அமைத்ததும் ஆடிய ஆட்டத்தைக் கண்டு ஸ்டாலினே கொஞ்சம் யோசித்து செந்தில் பாலாஜி, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரை அழைத்து, “ரெய்டு வர சான்ஸ் இருக்கு. கொஞ்சம் பாத்து இருந்துக்கோங்க” என எச்சரித்துள்ளார். இப்போது வரிசையாக ஒவ்வொருவரும் உள்ளே செல்லும் நிலையில், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்பி, ஸ்டாலினின் மருமகன் சபரீசன், அவரது உறவினர் பிரவீன் ஆகியோர் ஹிட் லிஸ்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கும்பல் சிக்கினால் இரண்டு ஆண்டுகளில் பதுக்கப்பட்ட 30 ஆயிரம் கோடிக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன..?
உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளை தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. சபரீசனின் உறவினரும் அவரது பினாமியாக செயல்படும் பிரவீன் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ஏற்கனவே சோதனைகளை அரங்கேற்றியுள்ளனர். வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. பல நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகள் வகிக்கும் பிரவீன் சிக்கினால் சபரீசன் மொத்தமாக காலியாகிவிடுவார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
அதிலும் திமுகவின் ஐடி விங் பொறுப்பாளரும் புதிய அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா மீதும் பார்வையை வீசியுள்ளது அமலாக்கத்துறை. தனது வாரிசை நிலைநிறுத்திவிட்டு வண்டியை ஓரங்கட்டவோம் என்று எண்ணிய டி.ஆர்.பாலு இதனால் கலக்கத்தில் உள்ளார்.
விடியா திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டுகளில் அடுத்தடுத்து அமைச்சர்கள் ஊழல் புகார்களில் சிக்கி கம்பி எண்ணக் காத்திருப்பதைக் காணும்போது விரைவில் இந்த ஆட்சி கலையும் என்பது உறுதியாகியுள்ளது… காத்திருப்போம்…
Discussion about this post