கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, கடந்த 12ஆம் தேதி அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி வருகை தந்தார். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கட்சியினரை அழைத்துக் கொண்டு கூட்டமாக வந்த அவர், அரசு நிகழ்ச்சிகளிலும், ஆலோசனைக் கூட்டங்களையும் தன்னை திட்டமிட்டு புறக்கணிப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கத்தையும் அவர் ஏற்க மறுத்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். தங்களைப் பகைத்துக் கொண்டால் மாவட்ட ஆட்சியர் வெளியில் நடமாட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
செந்தில்பாலாஜியின் மிரட்டல் தொடர்பாக தாந்தோன்றிமலை காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் புகாரளித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜி மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் செந்தில் பாலாஜியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.