கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தில் கல்பனா – அருட்செல்வன் தம்பதியின் இரண்டாவது மகன் தான் இரண்டரை வயது சிறுவன் அபிநாத். துறுதுறுவென சுட்டித்தனத்துடன் திரியும் அபிநாத், ஜனவரி 25ஆம் தேதி கிழக்கு தெருவில் உள்ள உறவினர் வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்தவன் மாயமாகி உள்ளான்.
அபிநாத்தைக் காணாமல் பெற்றோர், உறவினர் உள்பட ஒட்டுமொத்த கிராமத்தினரே சல்லடை போட்டு தேடியுள்ளனர். ஊருக்கு புதிதாக வந்து சென்ற குடுகுடுப்பைக்காரர்கள், பூம் பூம் மாட்டுக்காரர்கள் குழந்தையை கடத்திவிட்டார்களா என்று ஒரு பக்கம் தேட, அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் சாமியாடிபடி, சிறுவன் வடக்கு திசையில் இருப்பதாகச் சொன்னதை நம்பி அந்தப்பகுதியிலும் சிலர் தேட சிறுவனோ சிக்கவில்லை. இதனிடையே போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் கிணறு, வயல்வெளி, காடு என்று தேடியுள்ளனர்.சிறுவனைக் காணாமல் ஊரே சோகத்தில் இருக்க. இரண்டாம் நாள் தேடுதலின்போது அந்தப் பகுதியில் ஒரு வீட்டில் கழிவறை கட்டுவதற்காக தோண்டப்பட்டிருந்த 6அடி பள்ளத்தில் சிறுவன் அபிநாத் சடலமாக மிதப்பதாக இரவு 7 மணிக்கு கிடைத்த தகவலில் பெற்றோரும் உறவினரும் அலறித்துடித்தனர்.
அங்கு வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணையிலும் ஈடுபட்டனர். சிறுவன் இயல்பாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் கிராமத்தினரோ அதனை ஏற்கவில்லை. தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்திருந்தால் 2 நாள் ஆன நிலையில் உடலில் எந்த மாற்றமும் ஏன் ஏற்படவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், காவல்துறை விசாரணையை முறையாக நடத்தினால் மட்டுமே அது வெளிப்படும் என்றும் ஆதங்கப்படுகின்றனர் கிராமம் மக்கள்.
தெருவில் விளையாடிய சிறுவன் சடலமான சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை மரணம் என மருத்துவ அறிக்கை கூறுவது உண்மையா? கொலை செய்து சடலத்தை வீசியிருப்பதாக கிராமத்தினர் சொல்வது உண்மையா? காவல்துறையின் முழுமையான புலனாய்வில் ஈடுபட்டால் மட்டுமே உண்மை வெளியில் வரும்.