தள்ளாத வயதிலும் உழைக்கும் மூதாட்டி – 40 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வரும் மூதாட்டி

உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லே…என்ற கவிஞர் வாலியின் வரிகளுக்கு ஏற்ப கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 80 வயதிலும் அயாராது உழைக்கும் ராமானுஜம் அம்மாளை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள பாழ்வாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி ராமானுஜம் அம்மாள். கணவர் வேணுவுடன் பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்த ராமானுஜம் அம்மாள், 1981-ம் ஆண்டு சாலையோரத்தில் டீ கடை ஒன்றை ஆரம்பித்தார். அயராத உழைப்பால் தனது 6 மகள்கள் மற்றும் ஒரு மகனுக்கு திருமணம் நடத்தி வைத்தார்…

கடமை முடிந்தது என்றோ, மகள் மற்றும் மகனின் அரவணைப்பில் இனி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்றோ நினைக்கவில்லை ராமானுஜம் அம்மாள்.. தள்ளாத 80ஆவது வயதிலும் அயராது உழைத்து வருவதுடன், டீக்கடையோடு சேர்த்து இட்லி, பூரி என காலை உணவும், மதியம் தயிர், எலுமிச்சை, காய்கறி சாதம் என மதிய உணவையும் விற்பனை செய்து வருகிறார்…ஆயா கடை என்று மக்களால் அறியப்படும் இக்கடையை தேடி வந்து வாடிக்கையாளர்கள் உணவு வாங்கி செல்வதாக கூறுகிறார் ராமனுஜம் அம்மாளின் மகன் ரவி..

 

உழைப்பிற்கு வயது தடை இல்லை என்பதை நிரூபித்திக் காட்டியிருக்கிறார் இந்த 80 வயது மூதாட்டி..40 ஆண்டுகளாக அதே கூரைக் கொட்டகையில், தரம் மாறாது டீ மற்றும் உணவு விற்பனை செய்து வரும் ராமானுஜம் அம்மாளை அப்பகுதி மக்கள் வியந்து பார்ப்பதுடன் பாராட்டியும் வருகின்றனர்..

Exit mobile version