ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் செனட் சபையில் தோல்வி

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவி நீக்க தீர்மானம், செனட் சபையில் தோல்வி அடைந்தது.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர், உக்ரைனில் செய்துள்ள முதலீடுகளை விசாரித்து அவர் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உக்ரைன் அதிபரை ட்ரம்ப் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வழக்குப்பதிவு செய்ய தவறினால் உக்ரைன் ராணுவத்துக்கான நிதி நிறுத்தி வைக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ட்ரம்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இத்தீர்மானம் செனட் சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் ட்ரம்ப், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக 52 பேரும், ஆதரவாக 48 உறுப்பினர்களும் வாக்களித்தனர். நாடாளுமன்ற நடவடிக்கைகளை ட்ரம்ப் தடுத்ததாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக 53  உறுப்பினர்களும், ஆதரவாக 47 பேரும் வாக்களித்தனர். ட்ரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி அடைந்ததால், பதவி நீக்கத்தில் இருந்து அவர் தப்பியுள்ளார். அமெரிக்காவின் செனட் சபையை பொறுத்தவரை, ட்ரம்பின் குடியரசு கட்சி பெரும்பான்மை பலத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version