தென்காசி சுற்றுப்பகுதிகளில் குழந்தை இல்லாத தம்பதிகளைக் குறிவைத்து போலி மாத்திரை விற்பனை செய்தவர்களை பொதுமக்களே கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், திருமணமாகி குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியரை குறிவைத்து மர்ம நபர்கள் சிலர் குழந்தைப்பேறு மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட பின்பும் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த தம்பதிகள், மாத்திரை விற்பனை செய்தவர்களை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சாமர்த்தியமாகப் பேசி மீண்டும் ஊருக்குள் வரவழைத்துள்ளனர். பின்னர் அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்த பொதுமக்கள், காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களை மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டு போலி மாத்திரைகள் விற்பனை செய்து, பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.