நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை மீண்டும் தேர்ந்தெடுத்தால் வளர்ச்சிப் பணிகள் தொடரும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். நாட்டிலேயே முதல் முறையாக டீசல் என்ஜினை மின்சார என்ஜினாக மாற்றி இயக்கப்படும் ரயிலை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, தங்களது சுயநலத்திற்காக சாதிய பாகுபாடுகளை உருவாக்கி, அதை மேம்படுத்துகிறவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மத்திய பாஜக அரசு ஏழை மக்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த பாஜக அரசை மக்கள் தேர்ந்தெடுத்ததால், நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறிய பிரதமர், சமூக, பொருளாதார நிலையில் முன்னேற பல திட்டங்களை பெற்று நாட்டு மக்கள் பலன் அடைந்ததாக கூறினார். வரும் மக்களவை தேர்தலிலும் பாஜகவை தேர்ந்தெடுத்தால் வளர்ச்சிப் பணிகள் தொடரும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.