தூத்துக்குடியில், பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 102 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில், சோதனை மேற்கொண்ட பறக்கும் படையினர், அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில், 102 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஹரிஹரன் என்பவர் வியாபாரத்திற்காக நகைகளை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. உரிய ஆவணங்கள் இருந்தால் நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.