இலங்கையில் ஓரிரு நாட்களில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜேவர்தனே தெரிவித்துள்ளார்
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதல் குறித்து, அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் விஜேவர்தனே மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், கொழும்புவில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். அப்போது பேசிய ரூவன் விஜேவர்தனே, இலங்கையின் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் உதவியுடன், நாட்டின் நிலைமை ஓரிரு நாட்களில் சரிசெய்யப்படும் என்றார். தீவிரவாத தாக்குதலில் 9 தற்கொலைப் படை வீரர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும், அதில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் நன்கு படித்த, உயர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்றும், இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர்கள் என்றும் அவர் கூறினார். இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் மட்டுமே என்றும், இன்னும் சில பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத் துறையிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ரூவன் கூறினார். தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பின் தலைவர் ஆஸ்திரேலியாவில் பயின்றவர் என்றும், ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார் என்றும், உளவுத்துறை தகவலின்படி நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.