பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று காவல் துறை தலைமை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
முக்கியமான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், வாட்ஸ் அப் உள்ளிட்டவைகளை பார்ப்பதற்காக, அதிக நேரத்தை செல்போனில் செலவிடுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்புப் பணி பாதிக்கப்படுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பந்தோபஸ்து பணியில் இருக்கும் உதவி ஆய்வாளரில் தொடங்கி, அவர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் செல்போன்களை, பணி ரீதியாக மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு, விவிஐபி பந்தோபஸ்து மற்றும் திருவிழா பாதுகாப்பில் உள்ளவர்களில், உதவி ஆய்வாளருக்கு கீழ் நிலையில் உள்ளவர்கள் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது. மேலும், அந்தந்த நேரங்களுக்கு ஏற்ப, செல்போன் பயன்பாடு பற்றி மேல் அதிகாரிகள் முடிவெடுக்கலாம் என்றும் காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.