காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், 35 ஆயிரத்து 96 பஞ்சாயத்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர்களில் 20 பேர் அடங்கிய குழுவினர் டெல்லி வந்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங்கை சந்தித்த அவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்றுக் கொண்ட அமித்ஷா, அச்சுறுத்தல் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் 2 லட்ச ரூபாய்க்கான காப்பீடு வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் நிலைமை சீரடையும் போது காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.