10 கோடிக்கும் அதிகமான கைபேசி பயன்பாட்டாளர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட பிரபல கைபேசி செயலி ஒன்று, பாதுகாப்புக் குறைபாடுகளால் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் லட்சக் கணக்கான கைபேசி செயலிகள் உள்ளன. அவற்றை ஆண்ட்ராய்டு கைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் தேவைக்கு ஏற்ப பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவருகின்றனர். இந்த செயலிகளில் ஏதேனும் பாதுகாப்புக் குறைபாடுகளோ, வைரஸ் தாக்கும் அபாயமோ கண்டறியப்பட்டால், அவை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுவதும் உண்டு. சமீபத்தில் சூப்பர் செல்ஃபி, சி.ஓ.எஸ்.கேமரா, பாப் கேமரா -உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட செயலிகளை கூகுள் நீக்கி உள்ளது.
இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது ‘கேம் ஸ்கேனர்’. கூகுள் பிளே ஸ்டோரில் 10 கோடிக்கும் அதிகமான மக்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி இது. இதன் மூலம் புகைப்படங்களை எடுக்கும் போது அவற்றை எளிதாக பி.டி.எஃப்.களாக மாற்ற முடியும். இதில் வைரஸ் தாக்குதல் தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ்கள் பயனாளர்களுக்கு ஆபாசப்படங்களைக் காட்டுவதோடு, ஆபாச செயலிகளின் சந்தாதாரராகவும் அனுமதியின்றி பயனாளியைச் சேர்த்துவிடுகிறது.
இதனால்தான் கூகுள் பிளே ஸ்டோர்ஸ் இந்த செயலியை நீக்கி உள்ளதோடு, இந்த செயலியைப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் உடனே இதனை நீக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.இந்த வைரஸ் தாக்குதலானது கைபேசிகளின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே உள்ளது, இதனால் ஐ.ஓ.எஸ். வெர்ஷன் கைபேசிகளால் இப்போதும் கேம் ஸ்கேனரைப் பதிவிறக்க முடியும்.கைபேசிகளில் அதிக எண்ணிக்கையிலான செயலிகளைப் பயன்படுத்துபவர்கள், கூகுள் நிறுவனத்தின் எச்சரிக்கைகளையும் கவனிப்பது அவசியம்.